சம்பளத்தில் விழுந்த கல்.

மலையக அரசியலுக்குள் 
சிக்கித் தவிக்கும் சம்பள உயர்வு

மலையகத்தில் கல் இருக்கின்றது மலை இருக்கிறது மழை காலத்தில் அவை சரியத்தான் போகிறது. அதனால் மக்கள் தான் என்றுமே கவனமாக இருக்கவேண்டும் என்ற ஓர் அலட்சியப்போக்கில் தனியார் தோட்டக்கம்பனிகள் இருந்துவருகின்றன. அரசாங்க தோட்டங்களுக்கும் இதே கதிதான். மண்சரிந்தால் மக்களை காப்பாற்றுவதற்கோ அல்லது மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கோ எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதே இல்லை. மீரியபெத்தவில் மண்சரிந்தது, கயிறுகட்டி தோட்டத்தில் மண் சரிந்தது, இன்று களுபான தோட்டத்தில் மண்சரிந்தது என்று பல உதாரணங்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. மண்சரிந்த இந்த தோட்டங்களின் நிர்வாகம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக என்ன செய்தது?

சம்பள உயர்வை பெற்றுத்தருவோம் என்று தேர்தல் மேடைகளில் கூவியவர்கள் அடுத்த தேர்தலுக்கும் இந்த சம்பள விவகாரத்தையே கையிலெடுத்துவிட்டனர்

கல் குழி ஒன்றும் மீரியபெத்தவில் மண்சரிவுக்கு காரணம் என்ற தகவல்கள் வெளியானபோது குறித்த தோட்ட நிர்வாகம் அப்படி ஒன்றுமே இல்லை என்று மறுத்தது. இறுதியில் தோட்டத்தில் வீடுகட்ட இடம் வழங்கி தவறை சரி செய்துகொண்டது. அதேநேரம் தோட்ட நிர்வாகம் வழங்கிய நிலம் போதாது என்று மீண்டும் பிரச்சினை வந்ததும் நினைவிருக்கிறது.அதேபோல கயிறுகட்டி தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றுவரை வீடும் இல்லை, பாதுகாப்பும் இல்லை. இன்றும் பாதுகாப்பில்லாமல் வாழ்கின்றனர் அந்த மக்கள்.

கயிறுகட்டி தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்ட 
மக்களுக்கு இன்றுவரை வீடும் 
இல்லை, பாதுகாப்பும் இல்லை.

இன்று களுபான தோட்ட மக்கள் பல உயிர்களை மண்ணுக்குள் தொலைத்துவிட்டு செய்வதறியாது நிற்கின்றனர். ஒருதடவை மண் சரிந்த இடத்தில் மீண்டும் மண்சரியாது என்ற வாக்கை நம்பியும் சில அரசியல்வாதிகளின் திட்டமிட்ட சதியாலும் மீண்டும் வீடுகளுக்கே சென்றுவிட்டனர். எப்போது அங்கு மண்சரியுமோ அப்போது மீண்டும் திரும்பி பாடசாலைக்கு ஓடிவருவதும் மழை குறைந்தபின்னர் வீட்டுக்கு ஓடுவதும் பொதுவாகவே மலையத்தில் வழக்கமாகிவிட்டது என்று கூடசொல்லலாம். மண் சரிந்த தோட்டங்களில் காணக்கூடிய இன்னுமொரு விடயம் என்னவெனில் தோட்டத்தில் வேலைசெய்பவர் மண்சரிவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு தோட்ட நிர்வாகம் வேலைசெய்தமைக்கான சம்பளத்தை மட்டுமே வழங்கும். அடுத்த மாதம் அந்த தொழிலாளி வேலைசெய்தால் மட்டுமே அடுத்த மாதம் சம்பளம் கிடைக்கும்.

ஒருதடவை மண் சரிந்த இடத்தில் மீண்டும் மண்சரியாது என்ற வாக்கை நம்பியும் சில அரசியல்வாதிகளின் திட்டமிட்ட சதியாலும் மீண்டும் வீடுகளுக்கே சென்றுவிட்டனர்

மண்சரிந்த குறித்த தோட்டங்களில் ஒருமாதத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்ட மக்கள் வேலை இல்லாமல் இருக்கும்போது அவர்களுக்கான சம்பளத்தை வழங்குவது எப்படி நியாயம் என்று நினைக்கலாம். உழைப்பை மட்டுமே சுரண்டும் தனியார்தோட்ட கம்பனிகள் மக்களை பாதுகாக்க தவறியதனால்தான் மண்சரிவில் அவர்கள் சிக்கிக்கொண்டனர். வேலைக்கும் வராமல் மண்ணுக்குள் புதைந்த தனது சொந்தங்களை தேடிக்கொண்டிருந்தனர். இப்படி இருக்க அந்த மக்களுக்கு ஒருமாத சம்பளத்தை வழங்கி தோட்ட நிர்வாகம் அந்த மக்களுக்கு ஆறுதல் கூறியிருக்கலாம். ஆனால் இந்த தோட்ட நிர்வாகங்கள் வேலை செய்தால்தான் சம்பளம் என்கின்றது. அதேநேரம் தோட்டத்தில் வேலைசெய்பவர்களுக்கு மட்டுமே வீடு கட்டிக்கொடுக்கப்படும் என்று சந்தாவை குறிவைத்து அரசியல் பிழைப்பு செய்யும் தொழிற்சங்கங்களும் கூறிவருகின்றன. ஆகமொத்தத்தில் மண் சரிந்தால் அந்த தோட்ட மக்களின் சம்பளத்தில் கல் விழுந்துவிடும் என்றாகிவிட்டது.

வேலைக்கு வராமல் மண்ணுக்குள் 
புதைந்த தனது சொந்தங்களை தேடிக்கொண்டிருந்தனர். இப்படி இருக்க அந்த மக்களுக்கு ஒருமாத சம்பளத்தை வழங்கி தோட்ட நிர்வாகம் அந்த மக்களுக்கு ஆறுதல் கூறியிருக்கலாம்

இப்படியான சந்தர்ப்பங்களில்தான் கூட்டு ஒப்பந்தம் மூலம் சம்பள உயர்வு என்ற விடயத்தை பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. மறுபடியும் சம்பளம் என்ற விடயத்தில் மலையக மக்களை ஏமாற்றி அரசியல் மற்றும் சுயலாபத்தை கம்பனிகள் தேடிக்கொண்டுவிட்டன. கடந்த ஒன்றரை வருடத்துக்கு மேலாக இழுத்தடித்து இன்று எந்தவொரு பதிலையும் மக்களுக்கு வழங்காமல் மௌனம் சாதித்துவருகின்றன. அரசாங்கம் இதில் தலையிட்டும் கேட்காத கம்பனியா இனி ஆயிரம் ரூபாவுக்கு ஒத்துக்கொள்ளபோகிறது? நீங்கள் ஆயிரம் ரூபாவை கேட்டு வாங்கித்தருவதாக மக்களுக்கு வாக்கு கொடுத்தீர்கள். முடிந்தால் பெற்றுக்கொடுங்கள். இல்லை கூட்டு ஒப்பந்தத்தில் நீங்கள் உறுப்பினராக இருந்தது போதும் இனி எங்களுக்கு அந்த இடத்தை தாருங்கள் என்ற நோக்கில் தான் சில தொழிற்சங்கங்கள் சுத்தித்திரிகின்றன.ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க முடியாது வாக்கு கொடுத்த தொழிற்ச்சங்கங்கள் அமைதி காக்கின்றன. சம்பள உயர்வை பெற்றுத்தருவோம் என்று தேர்தல் மேடைகளில் கூவியவர்கள் அடுத்த தேர்தலுக்கும் இந்த சம்பள விவகாரத்தையே கையிலெடுத்துவிட்டனர். தனியார் ஊழியர்களுக்கு வழங்குவதாக அரசாங்கம் கூறிய 2 ஆயிரத்து 500 ரூபாவை தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மே மாதம் வழங்குவதாக கூறியது அடுத்த இரண்டு மாதத்துக்குள் தற்காலிகமாக வழங்குவதாக மீண்டும் ஒரு வாக்குறுதியை அரசு வழங்கியிருக்கிறது. அது தற்காலிகம் மட்டுமே.

கூட்டு ஒப்பந்தம் என்ற பெயரில் 
மலையக மக்களின் பொருளாதார வாழ்கையை தீர்மானிக்கும் சக்திகளாக தொழிற்ச்சங்கங்களோ 
அரசியல்வாதிகளோ 
இருக்கமுடியாது

கூட்டு ஒப்பந்தம் என்ற பெயரில் மலையக மக்களின் பொருளாதார வாழ்கையை தீர்மானிக்கும் சக்திகளாக தொழிற்ச்சங்கங்களோ அரசியல்வாதிகளோ இருக்கமுடியாது என்பது இன்றைய மலையக தலைமுறையின் வாதமாக இருக்கின்றது. மலையக தலைவர்கள் மக்களின் தேவையறிந்து செயற்படுகின்றார்களா என்பதும் இன்னுமொரு வாதமாக அமைந்துள்ளது. அதாவது மீரியபெத்தையில் மண்சரிந்து இரண்டு வருடமாகிறது. வீடுகள் கட்டித்தரப்படுவதாககூறி எடுக்கப்பட்ட நடவடிக்கையானது இன்னும் முடியவில்லை. அந்த பக்கம் எந்தவொரு அரசியல்வாதியும் வந்து வீடு கட்டுவது தொடர்பாக பார்க்கவேயில்லை. இறுதியாக அடிக்கல் நாட்ட வந்தவர்கள் இன்றுவரை திரும்பிப்பார்க்கவில்லை என்கின்றனர் மீரியபெத்த மக்கள். இந்த அரசியல்வாதிகளின் கவனத்தை மீரியபெத்த பக்கம் திருப்ப மேற்கொள்ளப்பட்ட சில விடயங்களை அங்குள்ள அரசியல்வாதிகளின் அடியாட்கள் தடுத்து நிறுத்தியதாகவும் அறியமுடிகிறது.

தோட்டத்தில் வேலைசெய்பவர்களுக்கு மட்டுமே வீடு கட்டிக்கொடுக்கப்படும் என்று சந்தாவை குறிவைத்து அரசியல் பிழைப்பு செய்யும் தொழிற்சங்கங்களும் கூறிவருகின்றன

இவ்வாறு அரசியல் என்ற தேவைக்காக மட்டுமே மக்களைப்பயன்படுத்திவருவது இன்று நேற்றல்ல காலம்காலமாக நடக்கின்ற ஒன்று என்றாலும் இன்றுள்ள அரசியல் கலாசார போக்கும் அவ்வாறே அமைந்துவிடக்கூடாது என்பதுடன் ஜனநாயக பண்புகளை அழிக்கும் வழிமுறையில் தான் மலையக அரசியல்வாதிகள் நடந்துகொள்கின்றனர். மேலும் கூட்டுஒப்பந்த அடிப்படையிலான சம்பள உயர்வு விடயத்தில் போட்டி, பொறாமை மட்டுமே இருக்கின்றது என்பதும் வெளிப்படையான உண்மை.