7 ஆண்டுகளாகியும் வெடிபொருட்களுடன் இன்னும் மக்கள்


கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெண் மணல் தரை, மணல் மலைகள். பார்ப்பதற்கு அவ்வளவு அழகு. அழகில் ஆபத்து இருக்கும் என்பார்கள். இங்கு அது சரியாக, பொருத்தமாகத்தான் இருக்கிறது.

வெடிபொருள் எச்சமொன்று காலில் தட்டுப்படாமல் நடக்கவே முடியாது. துப்பாக்கி ரவைகள், கோதுகள், பீரங்கிக் குண்டுகளின் பாகங்கள், ஏராளமாக மக்கள் வாழும் பகுதியில் பரவிக்கிடக்கின்றன.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் அடிக்கடி போர் இடம்பெற்ற முன்னரங்கப் பகுதியான நாகர்கோவிலில்தான் இந்த நிலை.

பிரதான பாதையிலிருந்து கொஞ்சம் கீழிறங்கினால் போரின்போது பயன்படுத்தப்பட்ட அத்தனை ஆயுதங்களையும் முழுசாகவோ அல்லது பகுதியாகவோ பார்த்துவிடலாம். மணலில், மரத்தில் மக்களின் உடம்பில் என்று பல வகை வெடிபொருட்கள், இன்னும் மக்களை விட்ட பாடில்லை.

விமானக் குண்டு வீச்சு மற்றும் ஷெல் வீச்சுகளால் ஏற்பட்டுள்ள பாரிய குழிகள் இன்னும் இருக்கின்றன. இராணுவத்தினர், புலிகள் இருந்த பங்கர்களும் அப்படியே இருக்கின்றன. குடியிருப்புகளுக்கு அருகில் இருக்கும் பங்கர்கள் காணப்படும் பகுதிகளுக்கு போகவேண்டாம் என மக்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், வெடிச் சத்தங்களோடு பிறந்தவர்கள் இங்கு அதே வெடிபொருட்களோடு விளையாடி வருகிறார்கள். பல வகையான துப்பாக்கி ரவைக் கோதுகள், பீரங்கிகளை பாதுகாத்து வைத்திருக்கும் பிளாஸ்ரிக் குழாய் போன்றவற்றைக் கொண்டு சிறுவர்கள் விளையாடுகிறார்கள்.

இந்தத் தொழில் ஈடுபட்டிருந்த ஒருவர் குண்டுவெடித்து உடல்சிதறிப் பலியாகியிருக்கிறார். முழுமையற்ற அவரது சடலத்தை 4 தினங்களுக்குப் பின்னர்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஒரு சில வீடுகளில் பூக்கன்று பாத்திகளை பாதுகாப்பதற்காக, அலங்காரத்துக்காக பாதுகாப்பு வேலியாக ஆயுத எச்சங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

போர் முடிவடைந்து 7 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் வெடிபொருட்களுடனான தொடர்பு இந்த மக்களிடமிருந்து அறுபடவே இல்லை.

தொழிலின்மை, குடும்பத்தை நடத்திச் செல்ல வருமானம் போதாமையால் இங்குள்ள மக்கள் விடுதலைப் புலிகளாலும் இலங்கை இராணுவத்தினராலும் விட்டுச் செல்லப்பட்ட வெடிபொருள் எச்சங்களை சேகரித்து இரும்புக் கடைகளுக்கு விற்பனை செய்துவருகிறார்கள். பெரியோர், சிறியோர், பெண்கள் என்ற வித்தியாசமில்லாமல் அனைவரும் இந்த ஆபத்தான தொழிலில் ஈடுபடுகிறார்கள். இந்தத் தொழில் ஈடுபட்டிருந்த ஒருவர் குண்டுவெடித்து உடல்சிதறிப் பலியாகியிருக்கிறார். முழுமையற்ற அவரது சடலத்தை 4 தினங்களுக்குப் பின்னர்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். முன்னரை விட இந்தத் தொழிலில் ஈடுபடுகிறவர்கள் குறைந்திருந்தாலும், இன்னும் ஒரு சிலர் பிழைப்புக்காகவும் கூடுதலாக வருமானத்தை ஈட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் வெடிபொருள் எச்சங்களை சேகரித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

பிழைப்புக்காக வெடிபொருள் தேடிச் செல்வதுதான் ஆபத்து என்று பார்த்தால், வீட்டில் இருந்தால் கூட அதே ஆபத்து காத்திருக்கிறது நாகர்கோவில் மக்களுக்கு. திருநாவுக்கரசு விமலாதேவி குப்பைகளையெல்லாம் கூட்டி தீமூட்டியிருக்கிறார். 2 ஷெல்கள் சீறிக்கொண்டு பாய்ந்திருக்கின்றன. அவை இரண்டும் காட்டுப் பக்கம் போனதால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று விமலாதேவி கூறுகிறார்.

"இதுல அன்றைக்கு ஒருக்கா குப்பைய கொழுத்தினம், அந்தா அவ்விடத்தில... ரெண்டு ஷெல் வெடிச்சது. நாங்க இந்த மரத்துக்கு கீழால ஒழிச்சி இருந்தனாங்கள். பிள்ளைகள் எல்லாம் ஸ்கூல் போயிட்டினம். நெருப்பு வச்சதனாலதான் ஷெல் வெடிச்சது. சர்ரென்று காட்டுப் பக்கம்தான் போனது. மூன்டாவதும் வெடிக்கப்போகும்போது இவர் அத எடுத்துட்டார்."

அன்று ஷெல்லை எடுத்தபோது ஏற்பட்ட அதே பயம் என்று நினைக்கிறேன், கண்கள் பெரிதாக, கைகள் இரண்டும் கன்னங்களைச் சேர்ந்துகொண்டன. நீண்ட பெருமூச்சு. நான்கு பிள்ளைகளும் அசைவில்லாமல் அப்படியோ தாயின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

உடனே வழமைக்குத் திரும்பியவர், “பிறகு மிதிவெடி காரர்கள் வந்து எடுத்துக் கொண்டு போயிட்டினம். இப்படி நிறய ரவுன்ட்ஸ் எல்லாம் வெடிச்சிருக்கு. இங்க நிறைய பங்கர்கள் இருக்குது. அந்தப் பக்கமெல்லாம் போகவேணாம் என்டு சொல்லியிருக்கினம்.”

வெயில் வெப்பத்தை தாங்க முடியாமல் ஒரு சிறிய வெண் மணல் மலையில் - அன்று ஒழிந்த அந்த மரத்தின் நிழலில் - நான்கு பிள்ளைகளுடன் உட்கார்ந்திருக்கிறார் விமலாதேவி. அந்த மணல் மலையின் பின்னால் உள்ள சிறிய குடிசை வீட்டில்தான் 6 பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். எந்தவித வீட்டுத்திட்டத்திலும் இன்னும் இவர் உள்வாங்கப்படவில்லை. விமலாதேவியின் கணவர் கூலி வேலை செய்துவருபவர். 2014 ஏப்ரல் மாதம் இங்கு வந்து குடியேறியிருக்கிறார்கள். இறுதிப் போரின் போது விமலாதேவியின் தங்கையும் அவரது கணவரும் மாத்தளன் பகுதியில் வைத்து ஷெல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களது 3 பிள்ளைகளில் ஒருவரையும் விமலாதேவிதான் வளர்த்து வருகிறார்.

நாகர்கோவிலில் இன்னும் பல பகுதிகளில் மிதிவெடி அகற்றப்படாமல் இருக்கிறது. இன்னும் பல பொதுமக்கள் தங்களது காணிகளில் குடியேற முடியாமல், விவசாயம் செய்ய முடியாமல் உறவினர் வீடுகளில், வாடகை வீடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள்.

மிதிவெடி அகற்றும் நிறுவனங்களும் தங்களது பணியை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களும் என்னதான் செய்வார்கள், அந்தளவுக்கு மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் பகுதியில் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒருவர் உடல்சிதறி உயிழந்திருக்கிறார், ஒருவர் காயமடைந்துமிருக்கிறார் என்று 8 வருடங்களாக மிதிவெடி அகற்றும் ஹலோ டிரஸ்ட் நிறுவனத்தின் காவலாளியாக பணியாற்றும் பாலசுப்பரமணியம் கூறுகிறார்.

பிரதான பாதையை விட்டு புல் தரையில் கால்பதிக்க பயமாக இருக்கிறது. பாதையோரமெங்கும் 'மிதிவெடி அபாயம்' போர்ட்கள் வரிசையாக நின்றுகொண்டிருக்கின்றன. தூரத்தில் ஒருவர் புதிதாக மண் கிளரப்பட்ட காணியில் வேலை செய்து கொண்டிருக்கிறார். வயல் வரம்பை விட கொஞ்சம் அகலமான பாதை வழியே சென்றால் அவரது காணியை அடையமுடியும். இரண்டு பக்கங்களும் நுனியில் சிவப்பு பூச்சு பூசப்பட்ட மரத் தடிகள் வரிசையாக நாட்டப்பட்டிருக்கின்றன. மிதிவெடி எச்சரிக்கை...

இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் அவரது காணி மிதிவெடி அகற்றப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது. காணியின் அருகே மிகப்பெரிய குழியொன்று. ஷெல் வீழ்ந்ததால் ஏற்பட்ட குழி அது. காணியைச் சுற்றி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் அவர்.

"அச்சுவேலியிலிருந்து வந்துதான் இந்த வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறன். வேலியடிச்சிட்டன், தண்ணீர்விட வேணும்தானே... இல்லையெண்டா இந்தக் காணியும் கைவிட்டு போயிடும்" என்கிறார் 3 பிள்ளைகளின் தந்தையான சண்முகப்பிள்ளை.

அண்மையில்தான் மிதிவெடி அகற்றித் தந்திருக்கிறார்கள், இந்தக் காணிக்கு வரும் சிறு வழி தவிர மற்றைய பகுதிகளில் இன்னும் மிதிவெடிகள் அகற்றப்படவில்லை, அப்படியிருக்கும்போது இங்கு வந்து குடியேற உங்களுக்குப் பயமில்லையா? என்று அவரிடம் கேட்டேன்.

அதற்கு அவர் சிரித்துக்கொண்டு, “என்ன தம்பி செய்ய...? எத்தனையோ வருஷங்களுக்குப் பிறகு இந்தக் காணி கிடைச்சிருக்கு. வீடு இருக்கிற காணி அதோ தெரியுது, காடு மாதிரி, அங்கதான் இருக்கு, காடாகிட்டு. அத இன்னும் விடல்ல. அத எப்ப விடுவானென்டு தெரியல்ல. அதுவரைக்கும் இருக்க முடியாது. அதுதான் ஒரு குடிசையாவது போட்டுக் கொண்டு இந்த இடத்தில வந்து இருந்திடலாம் என்டு வேலி அடைச்சிக் கொண்டிருக்கன். எங்கட சொந்தக் காணியில வாழ்ந்து சாகனும் தம்பி” – லேசாக துளிர்விட்டிருக்கும் பூவரசம் இலையை தடவியவாறு தடிக்கு நீர் ஊற்ற ஆரம்பித்தார் சண்முகப்பிள்ளை.

ஒரு சிலருக்கு இவ்வாறு ஒரு பகுதி காணியாவது கிடைக்க இன்னும் பலர் காணியுமின்றி வீடுமின்றி எப்போதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வாழ்ந்து வருகிறார்கள்.

கடவுள் தரிசனத்தை முடித்துக்கொண்டு நாகதம்பிரான் கோயில் முன்னால் உள்ள மரமொன்றின் நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்த 10, 12 பேர் கொண்ட குழுவில் முக்கால்வாசிப் பேருக்கு இன்னும் காணி கிடைத்திருக்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவராக தங்களது காணி, வீடு எப்படியிருந்தது என்று கூறினார்கள்.

அதில் ஒருவர், "அன்டைக்கு என்ட காணியையும் வீட்டயும் போய் பார்த்தனான். வீட எடுக்கவே முடியாது. திரும்ப வீடு கிடைச்சாலும் முழுசா உடைச்சிட்டுதான் கட்டவேண்டி வரும். சுவரெல்லாம் உடைஞ்சி கிடக்கு. ஆனா, அப்படி உடைச்சிட்டு கட்டவும் காசு இல்ல..." பேசுவதை நிறுத்திவிட்டு மற்றவர்களின் முகத்தைப் பார்த்து கையை விரித்தவாறு, “காணிய குடுத்தாதானே வீடு கட்டுறத பத்தி யோசிக்கலாம்” என்று தன்னுள் எழுந்த அதீத கற்பனையை இழுத்துப் பிடித்து நிறுத்தினார் அந்த வயதான தாய்.

அங்கிருந்த காணி, வீடுகளை இழந்த அத்தனை பேரும் இதே மாதிரியான கருத்தையே கொண்டிருக்கிறார்கள். ஏனைய பகுதிகளில் மக்களுக்கு காணிகள் மீள கிடைத்தது போல் தங்களுக்கும் கிடைக்கும் என்று அதீத நம்பிக்கையில் அவர்கள் இருப்பதை அத்தனை பேரின் பேச்சின் முடிவிலும் வெளிப்படுகிறது.

போர் நிறைவடைந்து 7 வருடங்களாகியும் நாகர்கோவில் மக்களின் நிலை இருந்ததை விட இன்று மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இங்கிருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்காமல் நாகர்கோவிலில் உள்ள வளங்களை கொள்ளையடிப்பதிலே அரசியல்வாதிகளும் கொள்ளையர்களும் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இயற்கை அரண்களாக இருக்கும் வெண்மணல் மேடுகளை அப்படியே அள்ளிக்கொண்டு செல்கிறார்கள். ஆழிப்பேரலை வந்தபோது மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு கடல்நீரை உட்புகவிடாமல் தடுத்த இந்த மணல் அரண்கள், இன்னொரு சிறிய ஆழிப்பேரலை ஊருக்குள் வருவதை தடுக்க தற்போது அங்கு இல்லை. மீன்பிடித் தொழிலையே பிரதான தொழிலாகக் கொண்டிருக்கும் இங்குள்ளவர்கள் தென்னிலங்கை மற்றும் இந்திய மீனவர்களால் மீன்வளத்தையும் இழந்துள்ளார்கள்.

இலங்கை அரசாங்கம் தங்களை இன்னொரு தேசத்து மக்களாய் நடத்துவதாக நாகர்கோவில் மக்கள் கூறுகிறார்கள்.